ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுமார் 60 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
அவற்றில் அநேகமானவை, அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றமை தொடர்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை காலப்பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ள தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த முறைப்பாடுகள் பொதுவாக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மக்களுக்கு விநியோக நடவடிக்கை, நியமனம் வழங்கல் மற்றும் இடமாற்றத்துக்கு மேலதிகமாக அரசியல் நோக்கில் சில நிறுவனங்களில் தலைவர்கள், கூட்டுத்தாபனங்களின் பிரதானிகள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்தல், அடிக்கல் வைத்தல் மற்றும் பணி நிறைவடையாத சில அபிவிருத்தி திட்டங்களை திறந்துவைத்தல் தொடர்பாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளதுடன் இதன் மூலம் அரசியல் கட்சி நேரடியாக மேன்படுத்தப்படுவதை காணக்கூடியதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அரச வளம், அரச அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த விழாக்கள் மூலம் நேரடியாக பொது மக்களின் பணம் பயன்படுத்தப்படுகின்றதுடன். இதன் மூலம் ஏதாவது அரசியல் கட்சி அல்லது யாராவது வேட்பாளர் ஒருவர் மேன்படுத்தப்படுமாக இருந்தால் அது தெளிவாக தேர்தல் சட்டத்தை மீறும் செயல் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த அரச ஊழியர்கள், தேர்தல் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டு வந்ததால் மீண்டும் அவர்கள் தொழில் செய்த இடங்களுக்கு கடமைகளுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்புபட்டு செயற்பட்டு வருவதாகவும் அவர்களின் அரச அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தி வருவதாகவும் எமக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு தாங்கள் அரச ஊழியர்களுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.