நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அமைதியான பணிச்சூழலை பராமரிப்பது அவசியம். நல்ல பணியிடம் என்பது சரியான நேரத்தில் வேலை பார்ப்பது, சக ஊழியர்களிடம் அக்கறை காட்டுதல், மற்றவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் உற்பத்தி திறன் அதிகரித்தல் போன்ற பல்வேறு செயல்களை உள்ளடக்கியது. உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பது அலுவலகத்தில் மோதல்களைத் தவிர்க்க உதவுகிறது. இதேபோல சின்னசின்ன விஷயங்களை நீங்கள் கவனித்து செய்து வந்தால் உங்கள் அலுவலக சூழல் இனிமையாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய விதிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
கருத்துக்களை தெளிவாக கூறுங்கள் : அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களை தெளிவாக கூறுங்கள். மேலும் உங்கள் மேலதிகாரிகள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வேலை குறித்து அவர்கள் விமர்சனங்கள் மற்றும் பரிந்துரைகளை சரியாக கேட்டு செயல்படுவதன் மூலம், உங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும். இது வேலையில் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்தவும்.
குழுப்பணி : அலுவலகத்தில் எப்போதும் குழுப்பணி என்பது முக்கியமான ஒன்றாகும். உங்கள் ப்ராஜெக்டில் பின்தங்கியிருக்கும் குழு உறுப்பினர்களுக்கு நீங்கள் ஆதரவாகவும், அவர்களின் இலக்குகளை நோக்கி அவர்களை வழிநடத்தும் திறன் கொண்டவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் பணிகள் விரைவாக முடியும். குழுப்பணி என்பது சிறப்பாக இருந்தால் தான் அலுவலகத்தில் இனிமையாக சூழல் நிலவும்
சுத்தமான பணியிடம் : உங்கள் பணியிடத்தை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் இடம், மேசை, நாற்காலி போன்றவற்றை தூய்மையாக பராமரிப்பது அவசியம். ஆவணங்களை சரியான முறையில் பராமரிப்பது தினசரி செயல்பாடுகளை சிறப்பாகக் கண்காணிப்பதற்கு முக்கியம். எந்தெந்த ஆவணங்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதை தினசரி ஒழுங்குபடுத்துங்கள்.
பாராட்ட தவற வேண்டாம் : அலுவலகத்தில் உங்கள் சக பணியாளர்களை பாராட்டுவதை மறக்க வேண்டாம். அவர்கள் சிறப்பாக பணி செய்யும் நேரங்களை அவர்களை பாராட்டுவது அவர்களுக்கு உற்சாகம், உத்வேகத்தை தரவல்லது. இது உங்கள் குழு உறுப்பினர்களுக்கு எனர்ஜியை தரும், இதனால் அடுத்தடுத்த பணிகளில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள்.
உங்கள் யோசனைகளைப் பற்றி பேசுங்கள் : ஆரோக்கியமான பணிச்சூழலை வளர்க்கும் கருத்துக்கள் மற்றும் உங்கள் யோசனைகளை அலுவலகத்தில் இருக்கும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது பணிகளை சிறப்பாக செய்து முடிக்க உதவும். அதேபோல மற்றவர்களின் யோசனைகளையும் காது கொடுத்து கேளுங்கள். அவற்றில் சரியான கருத்து இருந்தால் அதனை செயல்படுத்துவதும் நல்லது. இது உங்கள் வேலை விரைந்து முடிக்கவும், வேலையின் தரத்தை அதிகரிக்கவும் உதவும்.