கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச விவசாயிகள், தமது வாழ்வாதாரத்திற்காக முருங்கைக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சந்தையில் முருங்கைக்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு, மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் தமது வாழ்வாதாரத் தேவைக்காக முருங்கை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கும் என மொத்த விலையில் கொள்வனவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், முருங்கைக்காய்க்கு உரிய விலை சந்தையில் கிடைக்காத காரணத்தினால் இந்த பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடமும் இதே போன்று தாங்கள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டதாக முருங்கை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் குரங்குகள் மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளமையினால், இந்த பயிர்செய்கை ஊடாக எந்தவொரு லாபமும் நன்மையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அறுவடை செய்யும்போது அதற்கான கூலி பணத்தை கூட பெற முடியாத நிலையில் சந்தையில் முருங்கையின் விலை காணப்படுவதால், அறுவடைக்கு தயாராக உள்ள முருங்கைக்காய்களைக்கூட அறுவடை செய்யாது கைவிடும் நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் விவசாயிகள் நஷ்டமடையாத வகையிலும் சந்தையில் பொருட்களின் விலைகள் மாற்றமடைய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.