இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி நாளை காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.
இது அவரது 11-வது சுதந்திர தின உரை ஆகும். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர். உளவுப்பிரிவு பொலிஸாரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து பொலிஸார் 10 ஆயிரம் டெல்லி பொலிஸார் ஆகியோர் செங்கோட்டையின் வெளிப்புறப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் செயற்கை நுண்ணறிவு கெமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.