தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை தொழில்வல்லுனர் அமைப்பின் 37 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு செயற்முறையானது நடுத்தர மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.