கோட்டாபய ஆட்சிக்காலத்தில் சதித்திட்டம் ஊடாகவே வரிசை யுகம் ஏற்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிப்பேரணி சிலாபத்தில் இன்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற பேரணியில் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உட்பட பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த நாமல் ராஜபக்ஷ,
எந்தவொரு சவாலான சந்தர்ப்பத்திலும் நாட்டை காட்டிக்கொடுத்ததில்லை. இளம் தலைமைத்துவமே இன்று இந்த நாட்டிற்கு தேவைப்படுகின்றது.
கோட்டாபய ஆட்சிக்காலத்தில் சதித்திட்டம் ஊடாகவே வரிசை யுகம் ஏற்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கமும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
நாம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவோம். இந்த நாட்டின் தேசிய உற்பத்தியை 2 மடங்காக அதிகரிப்போம். டிஜிட்டல் முறைமையினுடாக நாட்டின் பலபிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
நாட்டில் வரிசையுகம் ஏற்படுவதை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரமுடியும்.
எமது அரசாங்கத்தில் முதல் 6 மாதங்களுக்குள் அரச சேவையினை டிஜிட்டல் மயப்படுத்துவோம் இதனூடாக மக்கள் இலகுவாக அரச சேவைகளை பெற்றுக் கொள்ளமுடியும்.
வரியினை குறைப்போம். அதேபோல் மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவிலேயே வரியினை நடைமுறைப்படுத்துவோம்.
விவசாயம் மீன்படி என அனைத்துதறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துவோம் இன்று தேர்தல் மேடைகளில் பலர் சேறுபூசும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளனர். அதனால் எந்தவித பயனும் இல்லை” என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தொிவித்தாா்.