யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்தி, முழு நாட்டுக்குமான பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசாரக் கூட்டமொன்று வவுனியா young star விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், பொது மக்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாஸ,
”அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம் என்று பொய் வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கி வருகிறது.
ஆனால், நாம் ஆட்சிக்கு வந்தால், அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை 24 வீதத்தால் அதிகரிப்பதோடு, வாழ்க்கைச் செலவு கொடுப்பணவை 17, 800 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரை அதிகரித்து, அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம்.
6-36 வீதமாக காணப்படும் வரிச்சூத்திரத்தை 1-24 வீதம்வரை குறைத்து, அரச ஊழியர்களையும் நடுத்தர வகுப்பினர்களையும் வலுப்படுத்துவோம்.
அரச சேவையை பாதுகாத்து, புதிய பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, திறமைகளையும் ஆளுமைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக விருத்தி செய்து அதனை முன்னெடுத்துச் செல்வதே எமது இலக்காகும்.
கோட்டாபயவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து, கம் உதாவ யுகத்தை உருவாக்குவோம்.
மேலும், மாதம் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்கி, வறுமையை ஒழிக்கும் சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த கடந்த ஜனாதிபதிகளாலும் தற்போதைய ஜனாதிபதிக்கும் கூட முடியாமல் போனது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இரண்டு மாகாணங்களையும் மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, அதனுடாக முழு நாட்டுக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” எனசஜித் பிரேமதாஸ மேலும் தொிவித்தாா்.