ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களின் உத்தேச சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில் ”சுற்றறிக்கையை வெளியிடுவது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் அல்ல.
எனவே அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்படவேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் மேடைகளில் கூறுவது உண்மையாக இருக்குமானால், தேர்தல் திகதிக்கு முன்னதாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.
ஏற்கனவே ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அரச பணியாளர்களுக்கான சுற்றறிக்கையை வெளியிட முடியும். ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை இலக்காகக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
எனினும் இது தொடர்பான அறிக்கைகளை வெளியிடும் போது ஜனாதிபதி ரணில் கணிசமான இடத்தைப் பெற்றுள்ளார். சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்
அதன்போது, அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை, ஆனால் அவர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களையே அரசாங்கம் நடத்தியது.
எனினும் தற்போது அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.
இதனை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வகையில் வழங்கவேண்டும். சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுங்கள்” இவ்வாறு ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.