நாட்டில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னணியில் மாபியா குழுவொன்று செயற்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது ”புதிய வெற்று பாஸ்போட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக மாயை உருவாக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக குடிவரவு திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் மாத்திரம் இந்த வரிசை ஏற்படவில்லை. அரசாங்கம் ஒன்லைன் முறையினை முதலில் ஆரம்பித்தது. இதனால் சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்தன.
பின்னர் அவை சிலரால் 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக அறியக்கிடைத்தது.
இதனை அறிந்து ஒன்லைன் சந்திப்பை உடனே நிறுத்த நடவடிக்கை எடுத்தோம்.
பின்னர் வரிசையில் வருமாறு கூறினோம்.
அப்போது வரிசையில் நிற்பதற்கும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மாபியாக்கள் பணம் அறவிட்டுள்ளன. அதன் பின்னரே நாம் பொலிஸாருக்கு இதனை பொறுப்பேற்குமாறு கூறினோம்” இவ்வாறு டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.