உலக அளவில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்துவரும் என்ற கொள்கையின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில், அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்களை விரிவுப்படுத்த ஒப்பந்தமாகி உள்ளது.
கட்டுமானம், சுரங்க கருவி, இயற்கை எரிவாயு இயந்திரம், டீசல் எலெக்ட்ரிக் என்ஜின்களை கேட்டர்பில்லர் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
இதேவேளை, நேற்று முன்தினம் சிகாகோவில் போர்ட் நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அதிகாரிகளை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். போர்ட் நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் 2-வது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். போர்ட் அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது.
சிகாகோவில், போர்ட் மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்டரீதியாக துணை புரிகிறது. நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது. ஐடிசர்வ் கூட்டமைப்பு, உயர்திறமை பணியாளர்களின் குடியேற்றத்திற்கு சட்ட உதவிகளை புரிகிறது.
சிகாகோவில், ஐடிசர்வ் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜெகதீஸ் மொசாலி, இயக்குனர்கள் சிவ மூப்பனார், சம்ப மொவ்வா, சிகாகோ பிரிவு தலைவர் சதீஷ் யலமஞ்சிலி மற்றும் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து, திறன்மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.