நைரோபி விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில், உள்ள ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.15,000 கோடிக்கு தர கென்யா அரசு முடிவு செய்துள்ளது. இதனால் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் வேலையில் அமர்த்தப்படுவர் என கூறி விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்துவதாக பலமுறை அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடைபெறாமல் கென்யா அரசு பார்த்து கொண்டது.
ஆனால் இன்று ஜோமோ சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானியே வெளியே செல் என்று முழக்கமிட்டு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது.
ஏராளமான விமானங்கள் தாமதமான நிலையில், பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.