இந்தியாவின், கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை (11) இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது.
இதனால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 46 பேரை கர்நாடக பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, மாவட்டத்தின் பதரிகொப்பாலு கிராமத்தில், விநாயகர் சிலை ஊர்வலத்தை எடுத்துச் சென்ற சிலர் மீது மற்றுமோர் தரப்பினரால் கற்கள் வீசப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வைத்துவிட்டு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
சிலர் அருகிலிருந்த கடைகளுக்கு தீ வைத்தும், டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் உள்ளூர் பொலிஸ் நிலையம் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.