ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழில் மீண்டும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பாட்டிருந்த முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் முதன்முறையாக எம்.ஏ.சுமந்திரன் சஜித்தின் பிரசார மேடையில் பிரசன்னமாகியிருந்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உத்தியோக பூர்வமாக தேர்தல் மேடையில் ஏறி ஆதரவினை உறுதிப்படுத்தியிருந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதா கிருஸ்ணன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்ட சுமந்திரம் பத்திரிகை எதிர்க்கட்சித் தலைவரிடம் நேற்று மேடையில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச,
ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது.
அத்தோடு வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளோம். வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.
மதுபான சாலைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை.
இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள்
வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம்.
நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருக்க முடியாது.
அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா்.