ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இவ்வாண்டின் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்துக்கான போட்டி விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் ஒன்பதாவது சீசனானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாய் மற்றும் ஷார்ஷாவில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் , குழு ஏ இல் ஆறு முறை சம்பியனான அவுஸ்திரேலியா, இந்தியா,நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு பி இல் 2016 சாம்பியன்களான மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியின் மூலம் இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் போட்டிக்குத் தகுதி பெற்றன.
இதேவேளை போட்டிக்கு முன்னதாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை 10 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டுபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள இரண்டு மைதானங்களில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன எனவும், ஒவ்வொரு அணியும் நான்கு குழு நிலைப் போட்டிகளில் விளையாடும் எனவும்,
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒக்டோபர் 20 ஆம் திகதி துபாயில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறும் அரையிறுதிக்கு முன்னேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.