லெபனானில் பேஜர் கருவிகள் உள்ளிட்ட கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 37 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, குறித்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் எனவும், இது முழுமையான போர் பிரகடனம் எனவும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் வான்வெளி தாக்குதலை நடத்தினர்.
இதில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படைத்தளபதி இப்ராகிம் அகில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.