பொதுத் தேர்தல் காரணமாக உரம் மற்றும் எரிபொருள் மானியங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்துள்ளது.
விவசாயிகளுக்கான உர மானியத்தை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து, அதனை ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வாரம் பணிப்புரை விடுத்திருந்தார்.
மேலும், மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்தையும் உயர்த்துமாறு அவர் திறைசேரி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.
எனினும், இந்த அறிவித்தலை பொதுத் தேர்தல் இடம்பெறும்வரை இடைநிறுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவானது, இந்த செயற்பாட்டினால் ஏனைய வேட்பாளர்கள் பாதிப்படைவார்கள் என்றே ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்தியதாகவும் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே இதற்கெதிராக இன்று தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் துசித பெரேரா தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னர் விவசாயிகளுக்கான 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவிருந்தமையால் குறித்த கொடுப்பனவை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியது.
பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவும் கடந்தவாரம் விவசாயிகளுக்கான உரமானியம், மற்றும் மீனவர்களுக்கான கொடுப்பனவை உயர்த்த நடவடிக்கை எடுத்திருந்தார்.தற்போது இந்தக் கொடுப்பனவையும் தேர்தல்கள் ஆணைக்குழு இடை நிறுத்தியுள்ளது.
மாதக் கணக்கில், இந்தக் கொடுப்பனவுகள் இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது என்பதால், விவசாயிகள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
எனவே, இடைநிறுத்தப்பட்ட உரமானியம் மற்றும் மீனவர்களுக்கான உயர்த்தப்பட்ட இந்த கொடுப்பனவை மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.