10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் பெண்களுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் போட்டி தொடங்கிய நிலையில், இன்றைய 3-வது நாளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இலங்கை நேரப்படி சார்ஜாவில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இலங்கை அணி முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையிலேயே ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் பங்களாதேஷ்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பங்களாதேஷ் முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியிருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையும், இங்கிலாந்துக்கு எதிராக பங்களாதேஷ்-ம் தோல்வியடைந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு மிகவும் கஷ்டமான நிலை உருவாகும்.
“ஏ” பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடம் பிடித்துள்ளன. “பி” பிரிவில் பங்களாதேஷ், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன.
நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து, இந்தியாவை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இந்தியா நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.