இம்மாத இறுதியில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்புரிமையை இலங்கை கோரும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர்,
இந்த மாத இறுதியில் பிரிக்ஸ் கூட்டத்துக்கு இலங்கை அழைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரிக்ஸில் அங்கத்துவம் பெறுவதற்கான கோரிக்கையினை முன் வைப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
கடந்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் போது, இது தொடர்பில் நாங்கள் அவருடன் கலந்துரையாடினோம் என்றார்.
பிரிக்ஸ் மாநாடானது 2024 ஒக்டோபர் 22 முதல் – 24 வரை கசானில் நடைபெறவுள்ளதுடன், இதனை ரஷ்யா நடத்தவுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பானது முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க ஆகிய நாடுகளை கொண்டிருந்தது.
2024 ஜனவரியில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவவை புதிய உறுப்பு நாடுகளாக இணைந்து கொண்டன.