ஹரியானாவில் எதிர்பாராத தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், பல தொகுதிகளில் இருந்து வரும் முறைப்பாடுகளை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் 2024 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி மூன்றாவது முறையாகவும் வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
இதன் மூலம் ஹரியானாவில் தசாப்த கால ஆட்சியினை பா.ஜ.க. தக்க வைத்துக் கொண்டது.
48 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்றது.
எனினும், அதன் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர்களில் எட்டு பேர் தோல்வியை சந்தித்துள்ளனர்.
48 இடங்களுடன், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது சிறந்த தேர்தல் செயல்திறனைக் கொடுத்துள்ளது.
இறுதியாக 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜா.க. 47 இடங்களைப் பெற்றிருந்தது.
ஹரியானாவின் 2024 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜா.க.வின் பிரதான போட்டியாளரான காங்கிரஸால் 37 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இதன் விளைவாக அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
ஏனைய கட்சிகள் ஒட்டு மொத்தமாக 5 இடங்களை கைப்பற்றி இருந்தன.
இந்த நிலையில் புதன்கிழமை (09) தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி என்பது இந்திய அரசியலமைப்புக்கும், ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி.
ஹரியானா மாநிலத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கவுள்ளோம்.
எங்களுக்கு ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அயராத கடின உழைப்பை வழங்கிய எங்கள் சிங்கத் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம். உங்கள் குரலை தொடர்ந்து உயர்த்துவோம் என்று கூறியுள்ளார்.