“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையினை வெளியிடுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையினை வெளிப்படுத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்குவதாகக்கூறி ஜனாதிபதிகள் ஆட்சிக்கு வந்தனர். தற்போதைய ஜனாதிபதியிடமும் மக்கள் நீதியை எதிர்ப்பார்க்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையினை வெளியிடுவதற்கு அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றமை வேடிக்கையானது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையினை வெளியிட வேண்டும் என தற்போதைய ஜனாதிபதியும் சவால் விடுத்திருந்தார்.எனவே தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த அறிக்கை ரகசியமான முறையில் வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன் ” இவ்வாறு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.