பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
கடந்த 36 ஆண்டுகளில் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னதாக 1969 ஆம் ஆண்டு நாக்பூரிலும், 1988 ஆம் ஆண்டு மும்பையிலும் நடந்த டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியிருந்தது.
கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 46 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதன் பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 402 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், 356 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா 10 விக்கெட் இழப்புக்கு 462 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணி சார்பில் அதிகபடியாக சர்பராஸ் கான் 150 ஓட்டங்களையும், ரிஷப் பந்த் 99 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதனால், நியூஸிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 107 ஓட்டங்கள் மாத்திரம் நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி போட்டியின் இறுதி நாள் ஆட்டமான இன்றைய தினம் 2 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.
வில் யோங் 48 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 39 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ரச்சீன் ரவீந்திரா தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 24 ஆம் திகதி புனேயில் ஆரம்பமாகும்.