பில்லியனர் எலோன் மாஸ்க், அமெரிக்க அரசியலமைப்பை ஆதரித்து ஆன்லைனில் வெளியிடப்பட்ட தனது மனுவில் கையெழுத்திடும் நபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் ஜனாதிபதி தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதாக சனிக்கிழமை (19) உறுதியளித்தார்.
பேச்சுரிமை மற்றும் ஆயுதம் தாங்கும் உரிமையை ஆதரிக்கும் நோக்கில் இந்த மனு வெளியிடப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களை அணி திரட்டும் நோக்கில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை அறிவித்தார்.
அத்துடன் இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட வெற்றியாளர் ஒருவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான காசோலையை வழங்கினார்.
அமெரிக்கா பி.ஏ.சி.யின் இணையதளத்தில் தொடங்கப்பட்ட இந்த மனு, அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் இரண்டாவது திருத்தங்களுக்கு ஆதரவாக ஸ்விங் மாநில வாக்காளர்களிடமிருந்து 1 மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் துப்பாக்கி உரிமைகள் ஒரு பிளவுபடுத்தும் பிரச்சினையாகவே இருக்கின்றன, சிலர் துப்பாக்கிகளை எளிதாக அணுகுவதை ஆதரிக்கிறார்கள், மற்றவர்கள் துப்பாக்கிகள் பொது மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வாதிடுகின்றனர்.