அணித் தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலுடன், நேற்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 38.3 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனால், ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 74 ஓட்டங்களுடனும், ரோஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
தொடர்ந்தும் மழை நீடித்தமையினால் ஆட்டத்தின் ஆரம்பம் தாமதமானதுடன், இறுதியாக இரவு 08.30 மணிக்கு பின்னர் டக்வெத் லூவிஸ் முறைப்படி இலங்கைக்கு 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சேஸிங்கில் அசலங்காவுக்கும் அறிமுக வீரர் நிஷான் மதுஷ்கவுக்கும் இடையேயான முக்கிய 137 ஓட்டங்கள் இணைப்பாட்மானது இலங்கை அணியின் வெற்றிக்கு உறு துணையாக அமைந்தது.
அசலங்கா 71 பந்துகளில் 77 ஓட்டங்களையும், தொடக்க வீரராக களமிறங்கிய நிஷான் மதுஷ்க 54 பந்துகளில் 69 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இறுதியாக இலங்கை 31.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கினை கடந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக சரித அசலங்க தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையுடன் உள்ளது.
தொடரின் இரண்டாவது போட்டி ஒக்டோபர் 23 ஆம் திகதி இதே மைதானத்தில் ஆரம்பமாகும்.