சோசலிச இளைஞர் சங்கத்தினால் 2022ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் மீதான பொலிஸாரின் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல் நடத்தி கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோசலிச இளைஞர் சங்க உறுப்பினர்கள் குழுவினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதன்போது, மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் 2022 ஆம் ஆண்டு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 84 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மருதானை டீன்ஸ் வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 2 பௌத்த பிக்குகள் மற்றும் 4 பெண்கள் உள்ளடங்கியிருந்தனர் .
சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகவும், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த போது, தொடர்ந்தும் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தே 83 பேரை பொலிஸ் காவலில் எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் 2022.09.25 அன்று தெரிவித்திருந்தது.
லிப்டன் சுற்று வட்டத்திலிருந்து டீன்ஸ் வீதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செல்லத் தொடங்கியவுடன், அது 1865 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டளைச் சட்டம் இலக்கம் 16 மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டவிரோதமானது எனவும் கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் சென்ற போது அவர்களை கலைந்து செல்லும்படி பொலிஸார் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பல எச்சரிக்கைகளையும் மீறி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது இது தடவைகள் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டதாக, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி, ஒரு சட்டவிரோத ஆர்ப்பாட்டம் என்பதாலும், வீதியில் பயணிக்கும் நபர்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைய முயற்சித்தால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டங்களின் பிரகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தேவையான பலத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 84 பேரையும் கைதுசெய்துள்ளதன் மூலம் இலங்கை அதிகாரிகள் கருத்து வேறுபாடுகளை தாங்கள் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்திருந்தது.
மேலும், கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு எதிராகவே இவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.