காம்பியாவுக்கு எதிராக புதன்கிழமை (23) நடைபெற்ற, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண ஆப்பிரிக்கா துணை பிராந்திய தகுதிச் சுற்று குழு பி போட்டியில் சிம்பாப்வே டி20 போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்து சாதனை படைத்தது.
நைரோபியில் நடைபெற்ற தொடரின் 12 ஆவது போட்டியில் காம்பியாவுக்கு எதிராக சிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மொத்தம் 344 ஓட்டங்களை குவித்தது.
அணித் தலைவர் சிக்கந்தர் ராசா 43 பந்துகளில் 15 சிக்ஸர்களுடன் 133 ஓட்டங்களை ஆட்டமிழக்காது விளாசினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபடியான ஓட்டங்களை குவித்த அணி என்ற புதிய சாதனையை சிம்பாப்வே படைத்தது.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் 314/3 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதுவே டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபடியான ஓட்ட எண்ணிக்கையாக நேற்று வரை இருந்த நிலையில், அந்த சாதனை சிம்பாப்வே அணியினரால் முறியடிக்கப்பட்டது.
அதேநேரம், சிக்கந்தர் ராசாவின் சதம், ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிம்பாப்வே வீரர் ஒருவர் அடித்த முதல் சதம்.
முன்னதாக, ருவாண்டாவுக்கு எதிரான போட்டியில் டியான் மியர்ஸ் 96 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதுவே டி20 கிரிக்கெட் அரங்கில் சிம்பாப்வே வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
15 சிக்ஸர்களை அடித்த ராசாவின் சாதனை, ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற நான்காவது இடத்தை பிடிக்க உதவியது.
இந்த போட்டியில் சிம்பாப்வே மொத்தம் 27 சிக்சர்களை அடித்து மற்றொரு சாதனையை படைத்தது.
இதன் மூலம், கடந்த ஆண்டு மங்கோலியாவுக்கு எதிராக நேபாளத்தின் முந்தைய 26 சிக்சர்கள் சாதனை முறியடிக்கப்பட்டது.