“குரலற்ற மக்களின் குரலாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி இருக்கும்” என அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் உள்ள தனியார் ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளதாவது “தலையே போனாலும் கசப்பான உண்மைகளைத்தான் நான் தொடர்ந்தும் கதைத்துவந்தேன்.
தற்போது குரல் இல்லாதவர்களுக்கு குரல் கொடுக்கத்தான், ரஞ்சன் ராமநாயக்க எனும் நான் ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி ஊடாக வந்துள்ளேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
இன்று இருக்கும் அரசியல் கலாசாரத்திற்கு இணங்க, முக்கியமான திருடர்கள் சிலர் ஓய்வுப் பெற்றுள்ளார்கள். வாழ்நாளில் ஓய்வே பெறமாட்டார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள்.
நான் ஆரம்பத்தில் இருந்தே இந்தத் திருடர்களுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்து வந்திருந்தேன். சொந்தக் கட்சியில் இருந்த திருடர்களைக்கூட வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, அவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடுகளை அளித்த காரணத்தினால்தான், நான் முன்னாள் அங்கம் வகித்த கட்சிகளும் என்னை நீக்கியிருந்தன.
இப்படியான எனக்கு, இனினும் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக செயற்பட வேண்டியத் தேவை கிடையாது. ஆனால், கீழ்தரமான அரசியலையும் நாம் மேற்கொள்ளப் போவதில்லை. அரசாங்க அதிகாரத்திற்கு வரும் கட்சியானது, மக்களுக்கான நல்ல வேலைத்திட்டங்களை செய்தால் அதற்கு நாம் நிச்சயமாக ஒத்துழைப்பு வழங்க பின்நிற்கப் போவதில்லை. திருடர்களை பிடிக்கவும் முழுமையான நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.