டொனால்ட் ட்ரம்பின் பெயரிடப்படாத பிரச்சார ஆலோசகர் உட்பட அமெரிக்க அரசியல் பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை சீன அரசுடன் சம்பந்தப்பட்ட ஹேக்கர்கள் இடைமறித்ததாக தி வொஷிங்டன் போஸ்ட் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்துள்ளது.
இந்த உளவு நடவடிக்கை, சால்ட் டைபூன் (Salt Typhoon) எனப்படும் ஹேக்கர் குழுவால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் பிரச்சார ஊழியர்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மீறல் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது துணைத் தோழரான ஜேடி வான்ஸ் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட தொலைபேசிகளைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பிரச்சாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் தரவுகளை சீன ஹேக்கர்கள் குறிவைத்ததாக ரொய்ட்டர்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
ஹேக்கர்கள் குரல் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் உள்ளிட்ட தகவல் தொடர்புகளை அணுகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2024 அமெரிக்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்க தொலைத்தொடர்பு பாதுகாப்பில் இந்த குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மீறல்கள் அரங்கேறியுள்ளன.