கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி பந்தையத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்பது முச்சக்கர வண்டிகளுடன் 09 சாரதிகளே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய, தெமட்டகொடை, மோதரை, கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பதிகளைச் சேர்ந்த 18 – 22 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் மாபொல பகுதியில் நீண்ட காலமாக குறித்த குழுவினர் இந்த பந்தயத்தை மேற்கொண்டு வந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் ராகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் மது அருந்தியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை வெலிசர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.