”திருடர்களை அரசாங்கம் பாதுகாக்க முற்படுமானால், அதனை சுட்டிக்காட்ட பலமான எதிர்க்கட்சியாக தாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்” என்று ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தீபாவளி தினமான நேற்று ரஞ்சன் ராமநாயக்க கொச்சிக்கடை, ஸ்ரீ பொன்னம்பலனானேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வருகைத் தந்திருந்த பக்தர்களுடன், அவர் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதன்போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தீபாவளி பண்டிகை என்பது இருளில் இருந்து வெளிச்சத்துக்கு மக்களை அழைத்துச் செல்லும் பண்டிகையாகும். அனைத்து இன மக்களுக்கும் கௌரவமளிக்கும் கட்சி என்ற வகையில், நாம் அனைத்து இந்து மக்களுக்கும் இவ்வேளையில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனைய கட்சிகளில், மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள திருடர்களுக்கு தான் தேர்தலில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான் நான் எனக்காக ஒரு கட்சியை ஸ்தாபித்து, ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் இந்தக் கட்சி ஊடாக மைக் சின்னத்தில் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.
இந்தத் தேர்தலில் எந்தவொரு ராஜபக்ஷவினரும் கிடையாது. இவர்கள் அனைவரும் ஒழிந்து விட்டார்கள். சுமார் 60 பேரளவில் தேர்தலில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள்.
எனவே, இந்தத் தேர்தலானது எமக்கு பாரிய சவாலாக இருக்காது என்றே நாம் நம்புகிறோம். எமது தரப்பில்தான், நேர்மையானவர்கள் உள்ளார்கள்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.