ஆண்டிகுவாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திரம் ஷாய் ஹோப், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 17 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஒரு நாள் போட்டிகளில் மேற்கிந்திய வீரர்கள் சார்பில் அதிகபடியாக சதங்களை பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் ஷாய் ஹோப் தற்சமயம் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கிறிஸ் கெய்ல் 25 சதங்களுடன் பட்டியலில் முதல் இடத்திலும், பிரையன் லாரா 19 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் குறித்த பட்டியலில் உள்ளனர்.
இங்கிலாந்துடன் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஆரம்ப வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், ஷாய் ஹோப் நான்காவது வீராக களமிறங்கினார்.
மொத்தமாக 127 பந்துகள் துடுப்பெடுத்தாடிய அவர் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 117 ஓட்டங்களை பெற்றார்.
அவரது உதவியுடன் மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்களை பெற்றது.
எனினும், 329 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
இங்கிலாந்து சார்பில் அணித் தலைவர் லியாம் லிவிங்ஸ்டோன் 124 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.
மூன்றாவது ஒருநாள் போட்டி பார்படோஸில் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.