அமெரிக்காவின் போயிங் தொழிலாளர்கள், விமான உற்பத்தி நிறுவனத்தின் அண்மைய ஒப்பந்த முன்மொழிவினை ஏற்பதாக திங்களன்று (04) வாக்களித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட போயிங் நிறுவன தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
நிறுவனத்தின் இயந்திர வல்லுநர்கள் மற்றும் விண்வெளித் தொழிலாளர்களின் சர்வதேச சங்கத்தின் (IAM) உறுப்பினர்களில் 59 சதவீதம் பேர் அண்மைய ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதில் நான்கு ஆண்டுகளில் 38 சதவீத ஊதிய உயர்வு மற்றும் ஒரே நேரத்தில் 12,000 அமெரிக்க டொலர்கள் போனஸ் மற்றும் தொழிலாளர்களுக்கான இடமாற்றங்கள் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் என்பவை அடங்கும்.
இந்த நடவடிக்கை மூலம், சியாட்டில் பகுதியில் உள்ள சுமார் 33,000 ஊழியர்கள் புதன்கிழமை (06) முதல் பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தம் போயிங்கிற்கு ஒரு கடினமான ஆண்டாக அமைந்தது.
தொழில்துறை நடவடிக்கையால் சியாட்டில் பகுதியில் அமைந்துள்ள 737 மேக்ஸ் மற்றும் 777 ஐ உற்பத்தி செய்யும் இரண்டு போயிங் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முற்றாக கடந்த 7 வாரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதுடன், அதிக நிதி இழப்புக்களை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.