2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன் அட்டவணை, போட்டி இடங்களை மாற்றியமைக்க தயாராக இருப்பதாகக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள தயக்கம் காட்டும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மத்தியில் இந்த தீர்மானத்தை PCB எடுத்துள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தது.
எவ்வாறெனினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு போட்டிகளுக்காக பாகிஸ்தான் செல்வதற்கு தேவையான அனுமதிகளை இந்திய அரசாங்கம் வழங்காது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் விளையாடும் வகையில் ஹைபிரிட் (கலப்பு) மாதிரியில் போட்டியை நடத்த PCB இப்போது ஆலோசித்து வருகிறது.
செய்தி அறிக்கைகளின்படி, இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் டுபாய் அல்லது ஷார்ஜாவில் விளையாடலாம், பாகிஸ்தான் தனது அனைத்து போட்டிகளையும் உள்ளூரில் விளையாடும்.
இதனிடையே தொடரின் அட்டவணையில் மாற்றம் தொடர்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இறுதி முடிவுக்காக ஐசிசி காத்துக் கொண்டிருக்கின்றது.
2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத்தின் போது, பாகிஸ்தானுக்குச் செல்ல இயலாது என இந்தியா தெரிவித்ததைத் தொடர்ந்து ஹைபிரிட் மாதிரியில் அப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பாகிஸ்தான் இந்தப் போட்டியை இலங்கையுடன் இணைந்து நடத்தியிருந்தது.