சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு பணிகளை மேற்கொள்வதற்காக பீட்டர் ப்ரூவர் தலைமையிலான IMF இன் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த மீளாய்வு பணிகளின் முன்னேற்றத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இதன்படி அடுத்த வாரம் நாட்டுக்கு வருகை தரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது, இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழான அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் வொஷிங்டனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் IMF உடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.