எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.
இதேவேளை, நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், அரசுப் பல்கலைக்கழகங்களின் கீழ் இல்லாத தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன் பிறந்த 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














