ஏற்கனவே சூறாவளி மற்றும் மின் வெட்டினால் தத்தளிக்கும் கியூபாவில் 6.8 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது.
கியூபாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும், எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் மையம் பார்டோலோம் மாசோவிற்கு (Bartolome Maso)தெற்கே சுமார் 25 மைல் (40 கிலோ மீட்டர்) தொலைவில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கியூபாவின் கிழக்குப் பகுதி முழுவதும் அதிர்வுகள் எதிரொலித்தன, சாண்டியாகோ டி கியூபா, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஹோல்குயின் மற்றும் குவாண்டனாமோ உள்ளிட்ட முக்கிய மக்கள்தொகை கொண்ட பகுதிகளையும் நிலநடுக்கம் உலுக்கியது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான ஜமைக்காவிலும் உணரப்பட்டதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஃபேல் புயல் கியூபாவின் பல பகுதிகளை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், நூறாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுடன், நாட்டின் பெரும்பகுதி மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிப் போனது.
கியூபா பல மாதங்களாக பல மணிநேர மின்வெட்டுளுடன் போராடி வருவதுடன், 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் முக்கிய நட்பு நாடான சோவியத் யூனியன் உடைந்ததில் இருந்து கியூபா மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.