காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நாவின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா இரத்து செய்தது.
இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிப்பது பற்றி தொடர்பில்லாததால் காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா இரத்து செய்தது.
15 நிரந்தர மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 14-1 என்ற கணக்கில் வாக்குகள் பதிவாகின. ஆனால், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் காரணமாக தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
காஸாவில் உடனடியான, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தத்தை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று தீர்மானம் கோரியது. மேலும், அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போர் நிறுத்தத் திட்டம் குறித்த தனது முதல் தீர்மானத்தை பாதுகாப்பு சபை கடந்த ஜூன் மாதம் ஏற்றுக்கொண்டது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனால் வலியுறுத்தப்பட்ட போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்தது.
இதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்கா கூறியது. இந்தத் தீர்மானத்தில் மூன்று கட்டத் திட்டத்தை ஏற்குமாறு ஹமாஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படாமல் போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.