இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்ட 29 வயதுடைய ப்ளாய் சாக் சுரின் (முத்து ராஜா) என்ற யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த லாம்பாங்கில் உள்ள தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தின் கால்நடை மருத்துவர்கள் அதன் தந்தங்களை வெட்ட திட்டமிட்டுள்ளனர்.
யானையின் நீண்ட மற்றும் கனமான தந்தங்கள் அதன் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கத் தொடங்கியமை கண்டறியப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லாம்பாங் மாகாணத்தில் உள்ள தேசிய யானைக் கழகத்தின் தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தின் யானைப் பாதுகாப்புத் தலைவர் மருத்துவர் தவீபோக் அங்கவானிச் புதன்கிழமை (20) கூறுகையில்,
ப்ளாய் சாக் சுரினின் ஒட்டுமொத்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது மிக நீளமான தந்தங்கள் அவரது உடல் அமைப்பைப் பாதிப்பதாக கூறியுள்ளார்.
நீண்ட தந்தங்கள் காரணமாக யானை நடக்கும்போது தலையை உயர்த்தி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் கவனித்தோம்.
எனவே, கழுத்து தசைகளில் அதிகப்படியான அழுத்தத்தைத் குறைக்க தந்தங்களின் நீளத்தை குறைக்க வேண்டியது அவசியம்.
நாங்கள் தற்போது பல்வேறு மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம், ஏனைய உடல் பாகங்களுக்கு தாக்கங்களை ஏற்படுத்தாமல் தந்தத்தின் நீளத்தை எவ்வாறு குறைப்பது என்பதை நாங்கள் திட்டமிடுவோம் என்று கூறினார்.
அதேநேரம், கால்நடை மருத்துவர் வாரங்கனா லங்காபின் வியாழக்கிழமை (21) இது தொடர்பில் கூறுகையில்,
யானை தந்தங்களின் எடையைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர்களிடம் குழுவினர் பேசி வருவதாகவும், இருப்பினும் எந்தவொரு முடிவும் பல நிறுவனங்களின் விவாதங்களும் ஒப்புதல்களும் தேவைப்படும்.
ப்ளாய் சாக் சுரின் முன் இடது காலில் ஏற்பட்ட காயம், இயக்கத்தை கடினமாக்கியது, எனினும் தொடர் சிகிச்சை மூலம் அதன் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் கூறினார்.
ப்ளாய் சாக் சுரின் யானையானது கடந்த 21 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து 2023 ஜூலை 2 ஆம் திகதி அன்று சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.