வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உண்மையில் கடந்த காலங்களில் வௌிநாடுகளில் நடைபெற்ற வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் புலிகளின் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்ததாக சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் விசாரணையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபட்டது உறுதியானது என்றும், இது தொடர்பாக பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.