பஞ்சாப் மூத்த அரசியல்வாதியும், வட இந்திய மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலை (Sukhbir Singh Badal) இலக்கு வைத்து புதன்கிழமை (04) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் வாசலில் சிரோமணி அகாலி தள தலைவா் சுக்பீர் சிங் பாதல் சக்கர நாக்காலியில் அமர்ந்து கொண்டிக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும், அருகில் இருந்த ஆதரவாளர் ஓடிச்சென்று அந்த நபரின் கையை தட்டி விட்டதால் சுக்பீர் சிங் எதுவித பாதிப்பின்றி உயிர் பிழைத்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நரேன் சிங் சௌரா (Narain Singh Chaura,) என அடையாளம் காணப்பட்ட நிலையில், கோயிலின் வாசலிருந்த மக்கள் அவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மத தண்டனையின் ஒரு பகுதியாக கோவில் நுழைவாயிலில் காவலராக பணியாற்றிய சுக்பீர் பாதல் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுக்பீர் சிங் பாதலுக்கு எதிரான தண்டனை
பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை ஆட்சி செய்த சிரோமணி அகாலி தள அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் அக்கட்சியினருக்கு மத முறைப்படி தன்கா தண்டனையை வழங்கியது.
2015 ஆம் ஆண்டு பஞ்சாப் துணை முதல்வராக இருந்தபோது சிரோமணி அகாலி தல முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுக்பீர் சிங் பாதல், சீக்கியர்களுக்கும் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தூண்டிய வழக்கில் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சுக்பீர் சிங் பாதல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அகால்தக்த் அவருக்கு இந்த தண்டனையை விதித்துள்ளது.
இதன்படி அம்ரிஸ்தரில் பொற்கோவிலில் சேவாதார் ஆக சேவை செய்ய முடிவானது. நேற்று முன் தினம் முதல் இந்த தண்டனையை ஏற்று சுக்பீர் சிங் பாதல் சேவத்தார் நீல நிற உடையுடன் பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டுக்கொண்டு கையில் ஈட்டியோடு கோயிலுக்கு காவல் இருந்து மத தண்டனையை நிறைவேற்ற தொடங்கினார்.
துப்பாக்கி சூட்டினை நடத்தியவர் தொடர்பான விபரம்
நரேன் சிங் சௌரா 1984 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், பஞ்சாபிற்கு ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் கடத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் சௌரா, கொரில்லா போர் மற்றும் “தேசத்துரோக” இலக்கியம் பற்றிய புத்தகத்தை எழுதியதாக கூறப்படுகிறது.
ஜெயில்பிரேக் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர், ஏற்கனவே பஞ்சாபில் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
அமிர்தசரஸ், டர்ன் தரன் மற்றும் ரோபர் மாவட்டங்களில் பல வழக்குகள் சௌரா மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
2004 ஆம் ஆண்டு பரபரப்பான புரைல் ஜெயில்பிரேக் வழக்கில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் கொலையாளிகள் உட்பட நான்கு கைதிகள் 94 அடி சுரங்கம் தோண்டி தப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.