இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியானது இன்று (05) க்கெபர்ஹாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆட்டமானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிறது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மார்கோ ஜோன்சனின் அசத்தலான பந்து வீச்சினால் (7/13) இலங்கை முதல் இன்னிங்ஸில் வெறும் 42 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதேநேரத்தில், அணித் தலைவர் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரின் இரண்டாவது இன்னிங்ஸ் சதங்கள் கிங்ஸ்மீட், டர்பனில் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியைத் தேடித்தந்தன.
இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது மற்றும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் WTC அட்டவணையில் முதல் இரண்டு இடத்தில் நீடிப்பதற்கான அதன் வாய்ப்பு அதிகரிக்கும்.
அதேநேரத்தில், முதல் டெஸ்டில் தோல்வியடைந்ததால், இலங்கைக்கு தொடரை சமன் செய்வதற்கு இந்த ஆட்டம் மிக முக்கியமானது.
மேலும், இரு அணிகளும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான நம்பிக்கையை உயிருடன் வைத்திருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தங்களது வெற்றி-தோல்வி சாதனையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.
அதன்படி, இதுவரை இரு அணிகளும் மொத்தம் 32 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா 17 வெற்றிகளையும், இலங்கை 09 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
06 போட்டிகள் சமனிலையில் முடிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.