‘கிளப் வசந்த’ என்று அழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 08 சந்தேக நபர்களையும் இரு சரீரப் பிணை மற்றும் தலா 100,000 ரூபா பிணையில் விடுவிக்குமாறு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், எட்டு சந்தேக நபர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதிபதி, அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
கடந்த ஜூலை 08 அன்று அத்துருகிரிய மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள பச்சை குத்துதல் மற்றும் ஸ்டூடியோ திறப்பு விழாவின் போது இந்த துப்பாக்கி சூட்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்த 6 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் “கிளப் வசந்த” என்று அழைக்கப்படும் 55 வயதான வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் 38 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
காயமடைந்த நால்வரில் பிரபல பாடகர் கே.சுஜீவா மற்றும் வசந்த பெரேராவின் மனைவியும் அடங்குவர்.
விசாரணையின் போது, புலத்சிங்கள பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணியொன்றில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய வேனை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்த சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் கடுலை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.