இலங்கையின் மின்சார சபைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சிறிய செலவின நிதி வசதியை (SEFF) ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)அங்கீகரித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான இந்த நிதியளிப்பானது நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால எரிசக்தி துறை திட்டங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் என்று ADB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக எரிசக்தி திட்டங்களின் செயல்பாட்டு நிலைத்தன்மையை ஆதரிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிப்பதற்கான முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் என இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் Takafumi Kadono சுட்டிக்காட்டியுள்ளார்.
2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான இலங்கையின் இலக்கை ஆதரிப்பதில் இந்த நிதி ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.
மொத்த $30 மில்லியன் வசதியில், $15 மில்லியன் மொரகொல்ல நீர்மின் நிலையத்தின் செயல்பாட்டு நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்படும்.
மீதமுள்ள $15 மில்லியன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, கட்டம் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை எளிதாக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும்.