தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படவுள்ளது.
நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது சரக்கு சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அரிசியை இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.
அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றும் (12) நாளையும் (13) மேலதிகமான அரிசி கையிருப்பு நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.