ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் (Dausa) 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
56 மணி நேரம் அல்லது இரண்டு நாட்களுக்கும் மேலான அதிகாரிகளின் தொடர்ச்சியான மீட்பு பணிகளின் பின்னர், கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட ஆர்யன் என்ற சிறுவன் மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலிகாட் கிராமத்தில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார்.
மீட்புப் பணி ஒரு மணி நேரம் கழித்து தொடங்கியது.
ஜேசிபி வாகனங்கள், துளையிடும் இயந்திரங்கள் மற்றும் ஒரு பைலிங் ரிக் ஆகியவை மூலம் சிறுவனை மீட்பதற்காக இணையான சுரங்கப்பாதை தோண்டப்பட்டன.
அதேநேரத்தில் குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது மற்றும் சிசிடிவி கமராக்கள் மூலம் ஆர்யனின் நிலை கண்காணிக்கப்பட்டன.
துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சுமார் 160 அடியாக மதிப்பிடப்பட்ட நீர்மட்டம் உள்ளிட்டவை மீட்பு பணிகளில் பல சவால்களை ஏற்படுத்தியிருந்தன.
எனினும், நீண்ட நேர போராட்டத்தின் பின்னர், மீட்புப் பணியாளர்கள் சிறுவனை சுற்றி கயிறு கட்டி மயக்கமடைந்த நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர்.
பின்னர், மேம்பட்ட உயிர் பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட்ட ஆம்பியூலன்ஸில் ஆர்யன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.