தலைநகர் காபூலில் புதன்கிழமை (11) நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அகதிகளுக்கான ஆப்கானிஸ்தானின் அமைச்சர் கலீல் ஹக்கானி (Khalil Haqqani) கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தலிபான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹக்கானி தனது அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது, நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
இவர், ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் தலிபானின் சக்திவாய்ந்த பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தார், மேலும் அவர் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு பொறுப்பேற்றது.
அதேநேரம், ஹக்கானி ஐஎஸ் அமைப்பின் தாக்குதலால் கொல்லப்பட்டதை தலிபான் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கலீல் ஹக்கானியின் சகோதரர் ஜலாலுதீன் 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் படையினருடன் போரிட்ட புகழ்பெற்ற கெரில்லா தலைவர் ஆவார்.
மேலும் தலிபான்களின் 20 ஆண்டுகால கிளர்ச்சியின் போது பல தாக்குதல்களுக்குப் பின்னால் ஹக்கானி வலையமைப்பை நிறுவினார்.
2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு படைகள் முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டதன் மூலம் தலிபான்கள் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது.
எனினும், ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் பல குண்டுவெடிப்புகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமையும் குறிப்படத்தக்கது.