அமெரிக்காவின் பிரபல டைம் இதழானது, ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) 2024 ஆம் ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்டுள்ளது.
இதற்கு முன்பு ட்ரம்ப், 2016 இல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்த கௌரவத்தை பெற்றார்.
2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பின் வரலாற்று வெற்றி, அடுத்த பதவிக் காலத்தின் போதான மறுசீரமைப்புக் கொள்கைகள் என்பன இந்த ஆண்டின் சிறந்த நபராக ட்ரம்ப்பை தேர்வு செய்வ வழி வகுத்ததாக டைம் இதழின் பிரதம ஆசிரியர் சாம் ஜேக்கப்ஸ் (sam jacobs) குறிப்பிட்டுள்ளார்.
டைம் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், குடியரசுக் கட்சித் தலைவர் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கான சில திட்டங்களை மீண்டும் வலியுறுத்தினார்.
நேர்காணலின் போது ட்ரம்ப், தனது தேர்தல் வெற்றி, பொருளாதாரம் மற்றும் உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சூழ்நிலைகள் குறித்து விவாதித்தார்.
மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, ஜனவரி 6 கேபிடல் கலவர பிரதிவாதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது உள்ளிட்ட தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கூறினார்.
இந்த ஆண்டின் சிறந்த நபர் விருதுக்கு, துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், வேல்ஸ் இளவரசி மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உட்பட பத்து பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.