தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறையான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மோசடி விசாரணைப் பணியகம் இன்று (13) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம், மோசடி விசாரணைப் பணியகம் இன்று நீதிமன்றத்தில் ஏழு முறைப்பாடுகள் தொடர்பான உண்மைகளை அறிவித்தது.
2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் தாம் செய்த செலவுகள் குறித்த அறிக்கைகளை ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால், சில வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் இதுவரை அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும், 2023 ஆம் ஆண்டின் தேர்தல் ஒழுங்குமுறை செலவுச் சட்டம் எண் 3-ன் கீழ் இது குற்றமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, இது தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்தை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.