”சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்” என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
விமான நிலைய வளாகத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே பலர் நாட்டிற்குள் பிரவேசிக்கின்றார்கள். பயணிகளின் வருகைக்கேற்ப விமான நிலையத்தில் தங்கியிருப்பதற்கான வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றது.
அவற்றை நிவர்த்தி செய்வதற்கான யோசனை திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த அபிவிருத்தி திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் 15 மில்லியன் பயணிகளை உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தற்போது 2028 ஆம் ஆண்டளவிலேயே அதனை நிறைவு செய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை பொருத்தவரை பண்டாரநாயக்க விமான நிலையம்
முக்கிய இடமாகப் பார்க்கப்படுகின்றது” இவ்வாறு பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.