இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் மின் கட்டங்களை இணைக்கவும், அண்டை நாடுகளுக்கு இடையே பெட்ரோலிய குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் திங்கள்கிழமை (16) அறிவித்தார்.
புதுடெல்லியில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதேநேரம், பிரத்யேக டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இலங்கையுடன் இந்தியா ஒத்துழைக்கும்.
“இலங்கைக்கு இந்தியா இதுவரை 5 பில்லியன் டொலர்கள் கடன் மற்றும் மானிய உதவிகளை வழங்கியுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் எங்களிடம் ஒத்துழைப்பு உள்ளது,
மேலும் எங்கள் திட்டங்களின் தேர்வு எப்போதும் பங்காளி நாடுகளின் அபிவிருத்தி முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் இந்தியப் பிரதமர் கூறினார்.
மஹோ-அநுராதபுரம் புகையிரத சமிக்ஞை அமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் புனரமைப்புக்கு உதவி வழங்குவதற்கான இந்தியாவின் முடிவையும் அவர் அறிவித்தார்.
இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ் புதிய முயற்சிகளை பிரதமர் மோடி மேலும் விரிவாகக் இதன்போது கூறினார்.
அடுத்த ஆண்டு முதல், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களில் 200 மாணவர்களுக்கு மாதாந்திர புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இலங்கையின் 1500 அரசு ஊழியர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள்.
எங்கள் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளோம்.
வீட்டுவசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், பால்வளம், மீன்வளம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தியாவின் ஈடுபாடும் இதன்போது பிரதமர் மோடியால் வலியுறுத்தப்பட்டது.