”கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் பிரதமரும் மற்றும் சுகாதார அமைச்சரும் உறுதியளித்துள்ளனர்.
நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக இன்று முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடுத்தே, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் இந்த உறுதியை வழங்கியிருந்தனர்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவிக்கையில் ”ஒரு இனத்தை இலக்கு வைத்துதான், கொரோனா காலத்தில் இறந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும்.
இது அத்தியவசியமானது என்பதை அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும். இச் செயற்பாட்டை இந்த அரசாங்கம் செய்யாவிட்டாலும், இது ஒரு இனத்தை இலக்கு வைத்து கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்பதை அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்துக் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ”இது கடந்த அரசாங்கத்தினால் செய்யப்பட்ட மிகவும் மோசமானதொரு செய்றபாடு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதுதொடர்பாக நாம் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எமக்கு இந்தத் தகவல்களை மறைக்க வேண்டிய தேவை எங்கும் கிடையாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கருத்துத் தெரிவிக்கையில்
”உலக சுகாதார ஸ்தாபனமானது வழிகாட்டல் ஒன்றை வழங்கியிருந்தபோதிலும், அப்போதிருந்த அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளாமல்தான் உயிரிழந்தவர்களின் உடல்களை எரித்தது.
அரசியல் ரீதியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டாலும், சுகாதார அதிகாரிகள்தான் இதனை நிறைவேற்றினார்கள்.
நாம் இந்த விடயம் தொடர்பாக வைத்தியர் அனில் ஜயசிங்கவுடன், அப்போது பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.
அப்போது, இந்த தீர்மானமானது அரசியல் ரீதியான தீர்மானம் அல்ல என்றும் சுகாதார அமைச்சுதான் இந்தத் தீர்மானத்தை எடுத்தது என்றும் கூறியிருந்தார்.
இப்படியான ஒருவரை எப்படி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்க முடியும் என்று நான் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேட்கிறேன். நீங்களே, இந்தத் தீர்மானத்தையிட்டு வெட்கமடைவதாகக் கூறிவிட்டு, இப்படியான ஒருவரை எப்படி உங்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்க முடியும்? ” இவ்வாறு முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்?
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ”கொரோனா காலத்தில் இவ்வாறான முடிவுகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்போது சுகாதார அதிகாரிகள், நிபுணர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. மாறாக ஒரு குழுவொன்றின் ஊடாகவே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. அரசியல் ரீதியாகத்தான் இந்தக் குழுக்கள் செயற்பட்டன” இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய ”கொரோனா காலத்தில் அப்போதைய அரசாங்கம் செய்த இந்த செயற்பாட்டை ஒருபோதும் சரியெனக் கூறிவிட முடியாது. இது ஒரு குரோதமான நடவடிக்கை என்றே கூறவேண்டும்.
ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டால், இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் சம்பிரதாயங்கள் உள்ளன. இதன் ஊடாகத்தான் அவர்கள் இறந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இதனால்தான் மதரீதியாக இதற்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், கொரோனா போன்ற ஒரு நிலைமையில், இவ்வாறான சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டியது முக்கியமான ஒன்றாகும். ஆனால், இதனைவிடுத்து குரோதமானதொரு செயற்பாட்டை மேற்கொண்டுவிட்டு, இதனை சரியென விவாதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதோடு, இனிமேல் எந்தவொரு இனத்தையும் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளிலும் எமது அரசாங்கம் ஈடுபடாது என்பதையும் இங்கே கூறிக்கொள்கிறேன்.
அப்போதிருந்த அரசியல் கலாசாரத்தினால்தான், அரச அதிகாரிகளுக்கம் இவ்வாறான சில செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த கலாசாரத்தை நாம் முற்றாக மாற்றியமைப்போம்.
அப்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வு அவசியம் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
இதனை எவ்வாறு செய்யப் போகிறோம், இப்படியான துன்பங்கள் மீண்டும் இடம் பெறாதிருக்க எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகிறோம், இதனை அரசியல் பிரச்சினையாக பார்க்காமல் எவ்வாறு தீர்க்கப் போகிறோம் என்பது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி, உரிய நடவடிக்களை எடுப்போம்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க
”இந்த செயற்பாட்டுடன் 100 வீதம் ஒத்துப் போகாவிட்டால்கூட, ஹிட்லரும் இவ்வாறானதொரு செயற்பாட்டைத்தான் செய்தார். கைது செய்யப்பட்ட யூதர்களை கொலை செய்ய, தனக்கு ஏற்றது போல வைத்திய அறிக்கையை அவர் தயாரித்துதான், யூதர்களை கொலை செய்தார்.
நான் பல முஸ்லிம்களை சந்தித்தபோது, இந்த செயற்பாட்டினால் தாங்களே எரிவதைப் போன்று உணர்ந்ததாகத் தெரிவித்திருந்தனர். இது மக்களின் மனசாட்சியை உயிருடன் கொளுத்தும் ஒரு செயற்பாடாகும். இந்த செய்பாட்டை மேற்கொண்டுவிட்டு, பல காரணிகளை அப்போதைய அரசாங்கம் கூறியது.
இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாம் நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.